அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 28 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் போட்டியில் அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினாலும், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் 4ஓவர்களில் 57 ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சொதப்பியதால், அவர்கள் இருவரையும் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக 15 வயதே ஆன இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது; ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை போட்டியில் வைபவ் விளையாடினால், தனது 16 வயதில் அறிமுகமான கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் மிக இளவயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் எகிறியுள்ளது.
