அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விடியற்காலையில் நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி வீரமரணம் அடைந்ததாக ஈரான் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த முக்கியத் தலைவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் படுகொலையுடன் தொடங்கிய இந்த மூன்று வார காலப் போரில் ஈரானிய தலைமைத்துவத்தின் மிக முக்கியமான பிரமுகர்கள் வரிசையாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வாரத் தொடக்கத்தில் ஈரானியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜாரி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

ஈரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து முடக்கப்படுவது அந்நாட்டின் ராணுவக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. சர்வதேச நாடுகள் அமைதி காக்க வலியுறுத்தினாலும் போர் மேகங்கள் தொடர்ந்து சூழ்ந்துள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பொருளாதார மாற்றங்கள் குறித்த அச்சம் எழுந்துள்ளது.