பாகிஸ்தானின் ஏவுகணைகள் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்டவை என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட் கூறிய கருத்தை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானின் ரகசிய அணுஆயுதச் செயல்பாடுகளே உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல் என இந்தியா காட்டமாகப் பதிலளித்துள்ளது.
அமெரிக்கச் செனட் சபையின் உளவுத்துறைக் குழுவிடம் சாட்சியமளித்த தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட், “பாகிஸ்தான் உருவாக்கி வரும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள், எதிர்காலத்தில் அமெரிக்காவின் நிலப்பகுதியைத் தாக்கும் திறன்கொண்ட ‘ஐசிபிஎம்’ (ICBM) ரக ஏவுகணைகளாக மாறக்கூடும். ரஷியா, சீனா, வடகொரியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவை இலக்கு வைக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றன,” என்று எச்சரித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அண்ட்ராபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவின் இந்தக் கூற்றை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டம் இந்தியாவை மட்டுமே மையமாகக் கொண்டது. இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே தவிர, அமெரிக்காவைத் தாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்களது ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் தூரத்தை விடக் குறைவானவை.
மேலும், இந்தியாவின் ஏவுகணைத் திறன் 12,000 கிலோமீட்டரைத் தாண்டி வளர்ந்து வருவதுதான் அண்டை நாடுகளுக்கும் உலகிற்கும் கவலை அளிக்க வேண்டிய விஷயம் என்றும் அவர் சாடினார். பாகிஸ்தானின் இந்த அறிக்கைக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “பாகிஸ்தானுக்கு ரகசியமாக அணுஆயுதத் தொழில்நுட்பத்தைப் பரப்பிய நீண்ட கால வரலாறு உண்டு. அவர்களின் ரகசிய அணுஆயுதச் செயல்பாடுகள் உலகிற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை இத்தகைய அறிக்கைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” எனத் தெரிவித்தது.
துளசி கப்பார்ட் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அமெரிக்காவிற்கு எதிராக சுமார் 3,000 ஏவுகணைகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது 2035-ஆம் ஆண்டுக்குள் 16,000-ஆக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிச் செல்லும் நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், தெற்காசியாவின் அமைதியைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா நிதானமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும் பாகிஸ்தான் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
