த.வெ.க. மதுரை மாநாடு முன்கூட்டியே தொடக்கம் – விஜய் ஆலோசனை

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை அருகே பாரபத்தியில் நடைபெறுகிறது. முதலில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொண்டர்களின் மிகப்பெரிய வருகையைக் கருத்தில் கொண்டு, விஜய் ஆலோசனையின் பேரில் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கே விஜய் மாநாட்டு தளத்தை அடைந்து, அவருக்காக அமைக்கப்பட்ட நடைமேடையில் ரேம்ப் வாக் செய்ய உள்ளார்.


மேடை, தளம், தொண்டர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்

மாநாட்டுக்காக 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களின் வருகையை பதிவு செய்து சான்றிதழ் வழங்குவதற்காக, ஒவ்வொரு கேலரியிலும் QR கோடு வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே தொண்டர்கள் பெருமளவில் திரண்டு வர, குறிப்பாக விஜய் ரேம்ப் வாக் பகுதியை நோக்கி ரசிகர்கள் இடம் பிடித்து காத்திருக்கின்றனர்.


நிர்வாகிகள் உரை – விஜய் நிறைவு உரை

மாநாட்டில் முதலில் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் மாலை 4 மணியளவில் உரையாற்ற உள்ளார். பின்னர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவார்கள். அதன் பிறகு மாலை 5 மணிக்கே விஜய் தனது முக்கிய உரையைத் தொடங்குவார். இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், தொலைதூர மாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வசதியும் ஏற்படும் என கூறப்படுகிறது.