தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் உற்சாகத்துடன் நடைபெறுகிறது. பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.25 மணி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் மூலைமுடுக்கிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவிலிருந்தே மதுரைக்கு புறப்பட்டு, விடியற்காலையில் மாநாட்டு மேடையை நோக்கி திரண்டுள்ளனர். பலர் குடிநீர், உணவுப் பொட்டலங்கள் என தேவையானவற்றைத் தாங்களே கொண்டு வந்து மாநாட்டின் அடையாளமாக நின்று கொண்டுள்ளனர். துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து, கலை நிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்கப்பாடல், தீர்மானங்கள் ஆகியவை நடைபெறவுள்ளன. இவற்றைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் அன்பு கலந்த உற்சாக வாழ்த்தை தெரிவித்துள்ளார். “முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது… மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது. திரையில் உன்னை பார்த்து உயர்த்திய மக்கள் அரசியல் வெற்றிக்கும் துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை பதிவு செய்யும். நீ அரசியலில் அரியணை ஏறும் நாள் வரும், அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்பதை நிரூபிக்க நேர்மையான தலைவன் நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வருகிற தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை!” என்றார். இந்த உருக்கமான வாழ்த்து, தொண்டர்களின் உற்சாகத்தை இன்னும் உயர்த்தியுள்ளது.
