நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்நாட்களில் வெப்பநிலையின் அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு காணப்படும். அதிலும் சில நாட்கள் மைனசுக்கும் இறங்கும் நிலை உள்ளது. இதனால் தேயிலை, புல்வெளிகள், மலை  காய்கறி பயிர்கள் உள்ளிட்டவை கருகும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற இடங்களில் அதிக பனிப்பொழிவு நிலவும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதன்படி காலை முதல் மாலை வரை அதிக வெப்பமும், மாலை முதல் மறுநாள் விடியற்காலை வரை கடுமையான பனிப்பொழிவும் நிலவுகிறது.

இதனையடுத்து அதிகபட்சமாக ஊட்டியில் 23°C, குறைந்த பட்சமாக 1.6°C வெப்பநிலை பதிவாகிய நிலையில், அவலாஞ்சி பகுதிகளில் நேற்று -4°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.  இந்த சீசனில் மாவட்டத்தில் முதன்முறையாக நிலவிய  குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இந்த தொடர்பனிப்பொழிவால் 40 சதவீதத்திற்கும் அதிகமாக தேயிலை தோட்டங்கள் சேதமடைந்தும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.