தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 233 எம்எல்ஏக்களும் இன்று  பதவி பிரமாணம் செய்து கொள்கிறார்கள். இதோடு இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு சட்டசபையில் தமிழக வெற்றிக்கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு எம்எல்ஏக்களும் பதவியேற்று வரும் போது அவர்கள் செய்யும் சில விஷயங்கள் தற்போது சுவாரசியமாக மாறி வருகிறது.

 

அதன்படி கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏ விஎஸ் பாபு பதவி ஏற்பதற்கு முன்பாக முதலமைச்சர் விஜயை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னதாக திமுக தலைவரையே வீழ்த்திய தனக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்காதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் இதன் காரணமாக மூத்த நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்வதாகவும் அவருக்கு கட்சியில் ஒரு பெரிய பொறுப்பை வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. மேலும் இந்த செய்திகளை எல்லாம் மறுக்கும் விதமாக முதலமைச்சர் விஜய்யை கட்டி அணைத்து இந்த வதந்திகளுக்கு விஎஸ் பாபு முற்றுப்புள்ளி வைத்ததாக அந்த கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.