தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் அடுத்தடுத்து ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ம் தேதி அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய்க்கு, அங்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு ‘வேல்’ வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற விஜய், சீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பினார். தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், விஜய்யின் ஆன்மீகப் பயணம் இத்துடன் முடிவடையவில்லை.

வரும் 2-ம் தேதி அவர் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கும் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மதத் தலங்களுக்கும் செல்வதன் மூலம் ‘சமூக ஒற்றுமை’ என்ற செய்தியை அவர் சொல்ல விரும்புவதாகவும், தனது அரசியல் வெற்றிக்காகவே இந்தத் தீவிர வழிபாடுகளை மேற்கொள்வதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.