தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், முதல்முறையாக களம் கண்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.), ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் தனது வேட்பாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தின் 233 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட த.வெ.க. வேட்பாளர்களை, சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று மதியம் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் தேர்தல் அலுவலர்கள் வழங்கிய ’17 சி’ (17C) படிவங்களைக் கையோடு கொண்டு வந்திருந்தனர்.

கூட்டத்தில் பேசிய விஜய், வேட்பாளர்களை உற்சாகப்படுத்தியதோடு சில எச்சரிக்கைகளையும் விடுத்தார். அவர் பேசுகையில், தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், வெற்றி பெற்றவுடன் நீங்கள் வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது. நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் இங்கே காத்திருப்பேன். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகவும் விழிப்புடன் இருங்கள்” எனப் பேசியுள்ளார்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள், ஒருவேளை த.வெ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அவர்களைப் பணபலம் அல்லது அதிகார பலத்தால் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ‘குதிரை பேர’ அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே, விஜய் தனது வேட்பாளர்களை இப்போதே உஷார்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நடிகர் விஜய் வாக்கு எண்ணும் நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருப்பதாகவும் தேர்தலில் தோல்வியடைந்தால் வெளிநாட்டுக்கு சென்று விடுவார் என்றும் செய்திகள் பரவிய நிலையில் ஏற்கனவே இதனை அந்த கட்சியின் ஆதவ் அர்ஜுனா மறுத்திருந்த நிலையில் தற்போது இந்த உத்தரவின் மூலம் அவர் வாக்கு எண்ணும் நேரத்தில் பனையூரில் இருப்பது உறுதியாகிவிட்டது.