கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. உலகம் முழுவதும் 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி ஆமை), அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. இவை டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும் நிலையில், தற்போது ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற காலம் என்பதால், கொரோனா பரவலுக்கு பின், இந்த ஆண்டு ஆமைகள் அதிக அளவில் முட்டையிட்டு வருகின்றன. அதனை வனத்துறையினர் சேகரித்து அதற்கென உள்ள பிரத்யேக பொரிப்பகத்தில் வைத்து பொரிக்க செய்து, பின் கடலில் விடுகின்றனர்.

மேலும் இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரக அலுவலர்கள் கூறியுள்ளதாவது, மன்னார் வளைகுடா பகுதியில் 5 வகையான ஆமைகளில், இந்த ஆண்டு அதிக அளவில் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி சரகத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் முட்டைகள் மற்றும் திருச்செந்தூர் சரகத்தில் சுமார் 1,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அதற்கான பிரத்யேக பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளன. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் வரத்து அதிகரித்துள்ளது. மேலும்  இந்த முட்டைகளை பாதுகாத்து சேகரிப்பதற்காக பிரத்யேகமாக ஆமை பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ள இவர்கள், தினமும் அதிகாலை நேரங்களில் கடற்கரையோரங்களில் ரோந்து சென்று இந்த முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்துக்கு கொண்டு செல்கின்றனர் என்று கூறியுள்ளனர்.