செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், ‘இந்தியா’ கூட்டணிக்குள்ளே இருக்கும் விரிசல்கள் மற்றும் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது அவர்களுடைய கூட்டணியின் நிலைப்பாடு. ‘இந்தியா’ கூட்டணி என்பது இன்றைக்குப் பலவிதமாக உடைந்து போயிருக்கிறது, அதைப்பற்றி நான் தனியாகக் கருத்து சொல்லத் தேவையில்லை” என்று அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சி அளித்துள்ள முக்கியத்துவத்தை மிக விரிவாகப் பட்டியலிட்ட அவர், “பாஜகவைப் பொறுத்தமட்டில் மத்திய அமைச்சரவையில் 30-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து எல். முருகன் அவர்களுக்குக் கூட ராஜ்யசபா சீட் கொடுத்து மிகக் கௌரவமாக மந்திரியாக்கியிருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில் காங்கிரஸைக் கடுமையாகச் சாடிய அவர், “காங்கிரஸ் கட்சி இன்றைக்குப் பிரவீண் சக்கரவர்த்திக்கு ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்திருக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்ன கொடுத்திருக்கிறது? இதை பொதுமக்கள் மிகத் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று காங்கிரஸின் துரோகத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
