திமுக அரசுக்கு இதுதான் இறுதித் தேர்தல் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அந்தச் சமூகத்தின் பாரம்பரியப்படி அவருக்குத் தலையில் ‘சாபா’ (தலைப்பாகை) கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

“2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட திமுக நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள்.

தமிழகமே போராட்டக்களமாக மாறிவிட்டது. மக்கள் அந்த அளவுக்கு இந்த அரசின் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். இனி எப்போதும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.

வரப்போகும் தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தலாக இருக்கும். இந்தத் தேர்தலோடு மக்கள் திமுகவுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்” எனத் தனது பேச்சில் அதிரடி காட்டினார்.