இந்தியாவில் திருமணம் என்பது பண்டிகையை விட பிரம்மாண்டமாகவே நடைபெறும். சடங்குகள், விருந்து, அலங்காரம், மண்டபம் என பல்வேறு ஏற்பாடுகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. பலர் கடன் வாங்கி திருமணத்தை நடத்தி, பின்னர் கடன் கழிக்கவே ஆண்டாண்டு கணக்கில் பாடுபடுகிறார்கள். இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த கமல் அகர்வால் என்பவர் தனது திருமணத்தை வெறும் ரூ.1592 செலவில் நடத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கமல் அகர்வால் தனது காதலியான ருச்சியுடன் கடந்த மே 28ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் தனது ரெடிட் பதிவில், “என் சகோதரரின் திருமணத்தில் பல நாட்கள் சடங்குகள், அதிக செலவுகள் ஆகியவை நடந்ததை பார்த்த பிறகு, நானும் என் குடும்பமும் ஒரு எளிமையான திருமணத்தைத் தான் விரும்பினோம்” என கூறியுள்ளார். அதன்படி, திருமண பதிவு, புகைப்படம், பத்திரங்கள் என அனைத்திற்கும் சேர்த்து செலவு வெறும் ரூ.1592 மட்டுமே ஆனதாம்.
தகவலின் படி, பதிவு திருமணத்திற்கு ரூ.320, பப்ளிக் நோட்டரிக்காக ரூ.400, புகைப்படம் எடுப்பதற்காக ரூ.260, பிரிண்டிங் மற்றும் பிற செலவுகளுக்கு ரூ.290 மற்றும் மேலும் சில செலவுகளுக்கு ரூ.322 ஆகியவை மட்டுமே செலவாகியுள்ளது. மெஹந்தி விழா, ஆடம்பர ஆடைகள், பெரிய விருந்து ஆகியவை எதையும் மேற்கொள்ளாமல், எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளனர்.
அவரது இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் பெருமளவில் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. “இந்தக் காலத்தில் இது தான் உண்மையான அறிவுக் கட்டுப்பாடு,” “திருமண விழாக்களில் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டிய நேரம் இது,” என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருபக்கம், இந்த சம்பவம் எளிமையான வாழ்க்கையை வலியுறுத்தும் அதே சமயம், திருமணத்துடன் தொடர்புடைய சமையல்காரர்கள், புகைப்படக்கலைஞர்கள், அலங்காரக்கலைஞர்கள் போன்ற பலரது வாழ்வாதாரமும் இந்த துறையில் சார்ந்திருப்பதையும் மறந்துவிடக் கூடாது என்பதையும் சிலர் எடுத்துரைத்துள்ளனர்.
