பீகார் மாநிலம் மோதிஹாரியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையான மங்ரு சாஹனி என்ற நபர், மது குடிக்கப் பணம் இல்லாததால் ஊர் மக்களையே வாந்தி எடுக்க வைக்கும் ஒரு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளார்.

காட்டு முயலைப் பிடித்திருப்பதாகக் கூறி, ஒரு நாயைக் கொன்று அதன் இறைச்சியை ஒரு கிலோ 1000 ரூபாய் வீதம் ஊர் மக்களிடம் விற்றுள்ளார். மங்ருவின் பேச்சை நம்பி 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த இறைச்சியை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.

நாய்க்கறியை விற்று வந்த பணத்தில் மது வாங்கி குடித்த மங்ரு, போதை தலைக்கேறியதும் அடுத்த நாள் காலை ஊர் மக்களிடம் வந்து தான் விற்றது முயல் கறி அல்ல, நாய்க்கறி என்று உண்மையை உளறியுள்ளார்.

இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர் சொன்ன இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு நாயின் தலை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டன.

அந்தக் கறியைச் சாப்பிட்ட பலருக்கு வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.