குருகிராம் பிலாஸ்பூர்-படோடி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு, சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ஸ்கார்பியோ சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. காரில் வந்த நபர், வண்டியின் டேங்க் கொள்ளும் அளவுக்கு 6,000 ரூபாய் மதிப்பிற்கு டீசல் போடுமாறு பங்க் ஊழியரிடம் கூறியுள்ளார்.

ஊழியரும் அந்த கார் பெரிய கார் என்பதால், நம்பிக்கையுடன் முழுமையாக டீசலை நிரப்பியுள்ளார். ஆனால், டீசல் போட்டு முடித்துவிட்டு ஊழியர் பணத்தைக் கேட்பதற்குள், அந்த கார் டிரைவர் பணத்தைக் கொடுக்காமல் திடீரென காரை அசுர வேகத்தில் முடுக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

​பெரிய காரில் வந்து, உழைக்கும் ஏழை ஊழியர்களை ஏமாற்றிவிட்டு ஓடிய இந்த ஸ்கார்பியோ டிரைவரின் செயல் அங்கிருந்த ஒட்டுமொத்த ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் தரப்பில் உடனடியாக குருகிராம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, ஏமாற்றிச் சென்ற ஸ்கார்பியோ காரின் பதிவு எண்களைக் கண்டுபிடித்துள்ளனர். 20 லட்ச ரூபாய் காரை வைத்துக்கொண்டு வெறும் 6,000 ரூபாய்க்கு ஏமாற்றிய இந்த டிரைவரின் சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களைப் பெற்று வருகிறது.