மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில், மத வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி நடனமாடியதால் ஆத்திரமடைந்த கணவன் ஒருவன், தனது மனைவி மற்றும் இரண்டு சிறு வயது மகன்களைக் கோடாரியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, தானும் ரயில் முன்னால் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குடும்பத்தில் நீண்ட நாட்களாகவே கணவன்-மனைவி இடையே கடுமையான குடும்பத் தகராறு நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் நடந்த ஒரு ஆன்மீக விழாவில் மனைவி நடனமாடியது கணவனுக்குப் பிடிக்காததால், இருவருக்கும் இடையே மீண்டும் வீட்டில் வைத்து பயங்கர மோதல் வெடித்துள்ளது.
இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கணவன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியையும், எதுவும் அறியாத இரண்டு பிஞ்சு மகன்களையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளான். ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்துக்கட்டிய பின்னர், குற்ற உணர்ச்சியிலும் பயத்திலும் ஓடிய அவன், அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தனது உயிரையும் மாய்த்துக் கொண்டான்.
சம்பவ இடத்திற்கு வந்த மொரேனா போலீசார், வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று சடலங்களையும், தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த கணவனின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொடூரமாக உயிரிழந்த இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
