தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 26-வது ஆண்டு கொடிநாளை முன்னிட்டு, சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களுக்காகத் தொடங்கப்பட்ட தேமுதிக, கேப்டன் விஜயகாந்தின் வழியில் இன்று 26-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ குறித்த விவாதம் கிளம்பியுள்ள நிலையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது காலத்தின் கட்டாயம்; அதை யாராலும் தடுக்க முடியாது” எனத் தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் அண்மையில் பேசிய கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிரேமலதா, அமைச்சர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் எனவும், அரசு அதிகாரிகளை மதிக்கத் தெரியாதவர்கள் மக்கள் பணியில் இருக்கத் தகுதியற்றவர்கள் எனவும் சாடினார்.
“2026 சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் நிகழும், அதில் தேமுதிகவின் பங்கு முக்கியமாக இருக்கும்” என அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். பிரேமலதாவின் இந்தச் சீற்றம் அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.
