தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 1 லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்காக சுமார் 3,500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்கோடு செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம், மேலும் ஒரு லட்சம் குடும்பங்கள் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளைப் பெறப்போவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
