தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மாநில சுகாதாரத் துறையில் உள்ள துணைச் செவிலியர் மற்றும் கிராமச் சுகாதாரச் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிரந்தர நியமனம் அடிப்படையில் மொத்தம் 2,147 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் Multi – Purpose Health Workers (Female) பயிற்சி அல்லது Auxiliary Nurse Midwifery பயிற்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு ஊதியம் ரூ. 19,500 முதல் ரூ. 71,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று நாற்பத்திரண்டு வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதே சமயம், பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இட ஒதுக்கீடு பிரிவினர் ஐம்பத்தொன்பது வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மருத்துவ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [http://www.mrb.tn.gov.in/](http://www.mrb.tn.gov.in/) என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் டிசம்பர் 14, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இன்றி, நேரடியாக மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணிற்கு இருபது விழுக்காடும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணிற்கு முப்பது விழுக்காடும், டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு மதிப்பெண்களுக்கு ஐம்பது விழுக்காடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு அறுநூறு ரூபாயும், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு முந்நூறு ரூபாயும் செலுத்த வேண்டும். இந்தப் பணியிடங்கள் குறித்த மேலும் விரிவான தகவல்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்வையிடலாம்.