கணிதத்தின் மூலம் கடவுள் இருப்பதை நிரூபித்துள்ளதாக தென் கொரியாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி யங்ஹூன் கிம் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கிம், கணிதத்தில் ஒரு கோடு வரைவதற்கு எப்படி ஒரு புள்ளி அவசியமோ, அதேபோல் இந்த பிரபஞ்சம் உருவாவதற்கும் ஒரு தொடக்கப் புள்ளி அவசியம் என்றும், அந்த ஆதிப் புள்ளியே கடவுள் என்றும் விளக்குகிறார்.

மனித உடல் அழிந்தாலும் நமது உணர்வுகள் குவாண்டம் தகவல்களாகத் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும், மரணம் என்பது முடிவல்ல, அது ஒரு மாற்றம் மட்டுமே என்றும் அவர் வாதிடுகிறார். வரலாற்றிலேயே மிகச்சிறந்த அறிவாளி இயேசு கிறிஸ்து தான் என்பது இவரது கணித ரீதியான கருத்தாக உள்ளது.

யங்ஹூன் கிம் உலகின் மிக உயர்ந்த புத்திசாலித்தன குறியீட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது இந்தச் செய்தியின் மற்றொரு முக்கிய அம்சமாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் புத்திசாலித்தன குறியீடு 140 என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், கிம் தனது குறியீடு 276 என்று கூறுகிறார்.

இருப்பினும், ஒரு மனிதருக்கு இவ்வளவு அதிகமான புத்திசாலித்தன குறியீடு இருப்பது சாத்தியமற்றது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் இவரது கூற்றை மறுத்து வருகின்றனர். இது வெறும் விளம்பர உத்தி என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தாலும், அறிவியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை என்ற இவரது வாதம் புதிய சிந்தனையைத் தூண்டியுள்ளது.