கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொரோண்டோ மாகாணத்திற்குட்பட்ட மேற்கு வெல்லிங்டன் பகுதியைச் சேர்ந்த ஹிமன்ஷி ஹரனா (30) என்ற இளம்பெண், அப்துல் ஹபாரி (32) என்பவருடன் காதல் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹிமன்ஷி மற்றும் அப்துல் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹிமன்ஷியை அப்துல் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, அப்துல் அந்த வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனிடையே, ஹிமன்ஷி காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹிமன்ஷியை தீவிரமாக தேடினர். இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை அவரது வீட்டில் ஹிமன்ஷி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் ஹிமன்ஷியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அப்துல் ஹபாரியை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம், கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.