கேரளாவின் பத்தனம்திட்டா குடும்ப நீதிமன்றம் திருமண உறவில் ஏற்பட்ட ஏமாற்றுதல் மற்றும் மன உளைச்சலுக்கு எதிராக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது கணவருக்குத் துரோகம் இழைத்து, திருமணத்திற்குப் பிறகும் கள்ளத்தொடர்பைத் தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பருக்கு நீதிமன்றம் ரூ. 15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட கணவனின் வாழ்க்கையையும், குடும்பத்தின் கௌரவத்தையும் சீர்குலைத்ததற்காக இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு நபர் 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த இந்த வழக்கில், இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதும், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண் தனது பழைய காதலனுடன் தொடர்பில் இருந்ததும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டோனி தாமஸ் வர்கீஸ், கணவனின் திருமண வாழ்க்கை பாழாவதற்கு அந்தப் பெண்ணின் தாயார், சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரின் நேரடிப் பங்கேற்பும், கூட்டுச் சதியும் தான் காரணம் என்று தீர்ப்பளித்தார்.

இதன் காரணமாக, ரூ. 15 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அவர்கள் அனைவரும் இணைந்து வழங்க வேண்டும் என்றும், வழக்கு தொடரப்பட்ட 2018 ஆம் ஆண்டிலிருந்து 6 சதவீத வட்டியுடன் இதனைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், திருமணத்தின் போது மணமகனால் வழங்கப்பட்ட 32 கிராம் தங்க நகைகளை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் அல்லது அதன் தற்போதைய சந்தை மதிப்பைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.