உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பிகாபூர் பகுதியில், ராணுவ வீரர் ஒருவரும் அவரது மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சைலேந்திர பாண்டே என்பவருக்கும், சாதனா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 7 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் அண்மையில் குடும்ப விசேஷம் ஒன்றிற்காக ஊருக்கு வந்திருந்த சைலேந்திரா, தனது விடுமுறையை நீட்டிப்பதற்காக மனைவியையும் குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு கொல்கத்தாவில் உள்ள தனது பணி இடத்திற்குத் திரும்பியிருந்தார். இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறு காரணமாக சாதனா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் தனது மனைவியின் மரணச் செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போன ராணுவ வீரர் சைலேந்திராவும், தான் கடமையிலிருந்த கொல்கத்தாவிலேயே தற்கொலை செய்து கொண்டார். தம்பதியரின் இந்த விபரீத முடிவால் இவர்களது இரண்டு பிஞ்சு குழந்தைகளும் ஒரே நாளில் பெற்றோரை இழந்து அனாதரவாக நின்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், சாதனாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், குடும்பக் கலவரமே இந்த தற்கொலைகளுக்கு முதற்கட்டக் காரணம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.