மும்பை ஒர்லியில் இருந்து நரிமன் பாயிண்ட் வரை செல்லும் கடற்கரைச் சாலையில் வாகன ஓட்டிகளின் சோர்வைத் தவிர்க்கவும் பாதுகாப்பான வேகத்தை உறுதிப்படுத்தவும் ஆறு கோடி ரூபாய் செலவில் நவீன இசைச் சாலை அமைக்கப்பட்டது.
வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும்போது ஜெய் ஹோ பாடல் இசைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம் கடந்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிலும் முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தொடக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த இசைச் சாலையிலிருந்து வெளிவரும் சத்தம் தங்களுக்குப் பெரும் தொந்தரவாக இருப்பதாக அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தற்போது மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது ஒலிக்கும் இசையால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒலியின் அளவை ஆய்வு செய்ய நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ள மாநகராட்சி கமிஷனர் பூஷன் கக்ரானி ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இசையை நிறுத்துவது அல்லது ஒலித்தடுப்புச் சுவர்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
