ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் உள்ள படோபூர் கிராமத்தில், 28 வயதான ஷகிலா என்ற பெண் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் (8 மாதம், 3 வயது மற்றும் 7 வயது) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று கடுகு அறுவடை செய்ய வயலுக்குச் சென்ற ஷகிலா, இப்தார் நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை வயலில் உள்ள கிணற்றின் அருகே செருப்புகள் கிடப்பதைக் கண்டு சந்தேகித்த உறவினர்கள் உள்ளே பார்த்தபோது, குழந்தைகளும் தாயும் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

​கணவர் ஷாஹித்திற்கு இருந்த மனநல பாதிப்பு மற்றும் குடும்பத்தில் நிலவிய கடும் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், ஷகிலாவின் உறவினர்கள் இது திட்டமிட்ட கொடுமை என குற்றம் சாட்டுகின்றனர். திருமணமான நாள் முதலே ஷகிலாவை அவரது புகுந்த வீட்டினர் டார்ச்சர் செய்ததாகவும், பலமுறை பஞ்சாயத்து நடத்தியும் அவர்கள் மாறவில்லை என்றும் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர். “இது தற்கொலையா அல்லது யாராவது தள்ளி விட்டார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்” என உறவினர்கள் நீதி கேட்டு போராடி வருகின்றனர். போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.