திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை கண்ணனுடன் இணைந்து இறைச்சிக் கடை நடத்தி வந்த மாயாண்டி நேற்று நள்ளிரவு வழக்கம் போல் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்து தனது தாய் லதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த லதா தனது தற்காப்பிற்காக வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மாயாண்டியின் நெஞ்சுப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் ராபர்ட் தலைமையிலான காவல்துறையினர் மாயாண்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தாய் லதாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப் போதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.