தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவரை சூழ்ந்துகொண்ட மாணவியின் உறவினர்கள் நேற்று ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவியின் உயிரிழப்பு மிகவும் கொடுமையான சம்பவம் என்றும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். எரிவாயு உருளை தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய அமைச்சர் கூறினாலும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் போது உருளைகள் கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாக கூறினார்.

குறிப்பாக உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் சூழல் உருவாகியுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த குழப்பங்களுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் போர் சூழலில் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கப்பல்கள் மூலம் எரிபொருள் வந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுவது குறித்த கேள்விக்கு அப்படி கூறியிருந்தால் அது தவறான ஒன்று என்று அவர் பதில் அளித்தார். மேலும் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்த பிறகு மாணவியின் மரணம் குறித்த கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார்.