சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இது காவல்துறை விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மானாமதுரை பகுதியில் இருவரை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஒருவரை காவல்துறை கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்தது. கைது நடவடிக்கையின்போது தப்பிக்க முயன்றதால், பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் ஆகாஷின் கால் முறிந்ததாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டால் எப்படி மூச்சுத்திணறல் ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல்துறையின் சித்திரவதையாலேயே தனது மகன் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் தாக்கியதாலேயே தனது கால் உடைந்ததாக ஆகாஷ் தனது ரிமாண்ட் வாக்குமூலத்திலேயே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உடற்கூராய்வின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் உள்ளன. அவரது வலது காலின் நடுப்பகுதியில் எலும்புகள் பலத்த சேதமடைந்து முறிந்துள்ளன. தலையின் உட்பகுதியில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தரவுகள், ஆகாஷ் பாலத்திலிருந்து விழுந்ததால் காயமடைந்திருக்க முடியாது என்பதையும், காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்  என்று கூறப்படுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் திலீபன், எஸ்ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், மனோகரன், சரத் மற்றும் காளீஸ்வரன் உள்ளிட்ட 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.