ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள “காமேனி இஸ் பேக்” (Khamenei is Back) என்ற அனிமேஷன் வீடியோ உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
முன்னாள் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைச் சித்தரிக்கும் அந்த வீடியோவில், அவர் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும்போது தாக்குதல் நடப்பதும், பின்னர் ஒரு மர்ம நபர் அவரது மோதிரத்தை அணிந்துகொண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு உத்தரவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஈரானின் அதிகாரம் ஒரு தனி மனிதரைச் சார்ந்தது அல்ல, அது ஒரு தொடர் சங்கிலி என்பதை உணர்த்தவே இந்த வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
🚨 BREAKING: Iranian media released anime-style footage said to depict the final moments of former Iranian Supreme Leader Ali Khamenei before his assassination. pic.twitter.com/QNnQkjMLKI
— The Middle East (@A_M_R_M1) March 12, 2026
மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒரு வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா காமேனிக்கும் தங்களது கொலைப் பட்டியலில் இடமுண்டு என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
“எந்தவொரு பயங்கரவாதத் தலைவருக்கும் நான் ஆயுள் காப்பீடு வழங்கப் போவதில்லை” என ஆக்ரோஷமாகப் பேசியுள்ள நெதன்யாகு, லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்தும் ஈரான் இன்னும் பலவீனமடையவில்லை என்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
