மேற்காசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மோதல் போக்கினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக உள்நாட்டில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று ஈரான் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழிப் பாதையான பாப் அல் மாண்டேப் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரான் தற்போது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் இந்த முக்கியமான பாதையையும் முடக்கத் திட்டமிட்டுள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவரை அமெரிக்கா தாக்க முயன்றால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் இந்தப் பாதை முக்கியப் பங்கு வகிப்பதால் இது மூடப்பட்டால் சர்வதேச சந்தையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.