ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது ஈரானின் தவறான ஏவுகணைத் தாக்குதலால் நடந்தது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்தார். ஆனால், சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பிரத்யேக வீடியோ இந்த வாதத்தைப் பொய்யாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், ஈரானிய கடற்படை தளத்திற்கு மிக அருகில் உள்ள பள்ளி மீது விழுந்தது அமெரிக்காவின் ‘டொமாஹாக்’ (Tomahawk) ரக ஏவுகணை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுத நிபுணர்களின் ஆய்வின்படி, இந்த ரக ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை மட்டுமே பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் ராணுவ தளத்தையும், அதன் அருகிலேயே இருந்த பள்ளியையும் இந்த ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
“ஈரான் தான் காரணம்” என டிரம்ப் கூறி வரும் நிலையில், அமெரிக்க ஏவுகணை பாய்ந்த வீடியோ ஆதாரங்கள் தற்போது வெள்ளை மாளிகைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா போரில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
