ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. மகேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி என்ற மூதாட்டி, தனது வீட்டின் வெளியே நடந்து வரும் கட்டுமானப் பணிகளைப் பார்த்தபடி ஓரமாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வேன், திடீரென வேகம் எடுத்து மூதாட்டியின் மீது ஏறியது.

இதில் நிலைதடுமாறிய அவர் வேனின் அடியில் சிக்கிக்கொள்ள, ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சுமார் 15 அடி தூரத்திற்கு அவரைச் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகிப் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

 

விபத்து குறித்துத் தகவல் அறிந்த மகேஷ் நகர் போலீசார், உடனடியாக விரைந்து வந்து மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வேனைப் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த ஓட்டுநர், “சாலையில் மூதாட்டி அமர்ந்திருப்பதை நான் கவனிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார். எனினும், வேன் வேகமாக ஏறி அவரை இழுத்துச் சென்ற விதம் குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய கவனக்குறைவால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.