உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அரசு இயந்திரம் தோல்வியடைந்து, காவல்துறையின் கோப்புகள் மூடப்பட்ட நிலையில், ஒரு தாயின் விடாமுயற்சியும் பாசமும் நீதியை நிலைநாட்டியுள்ளன. போலீசாரால் ‘துப்பு துலக்க முடியவில்லை’ என கைவிடப்பட்ட வழக்கில், குற்றவாளியைக் கண்டறிந்து சிறைக்கு அனுப்பியுள்ளார் ஒரு வீரத்தாய்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி, டேராடூனின் பிரேம்நகர் பகுதியில் ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. அரசுப் பணித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 18 வயது இளைஞன் க்ஷிதிஜ், சாலை கடக்கும்போது அதிவேகமாக வந்த ஒரு ‘டம்பர்’ லாரி மோதி படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சில காலம் கழித்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தையோ அல்லது டிரைவரையோ கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து ‘இறுதி அறிக்கை’ தாக்கல் செய்தனர். ஆனால், தனது மகனை இழந்த தாய் லலிதா சவுத்ரி, தன் மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனச் சபதமேற்றார். காவல்துறை கைவிட்ட நிலையில், லலிதா சவுத்ரியே துப்பறியும் பணியில் இறங்கினார். விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தேடித் தேடி மணி கணக்கில் ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் வழிப்போக்கர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். தனது விடாமுயற்சியால், சந்தேகத்திற்குரிய 10 லாரிகளின் பட்டியலைத் தயார் செய்தார். சுமார் 1.5 ஆண்டுகள் தொடர் தேடுதலுக்குப் பிறகு, விபத்து ஏற்படுத்திய லாரியையும், அதை ஓட்டிய டிரைவரையும் ஆதாரங்களுடன் கண்டுபிடித்தார்.
தாய் லலிதா சவுத்ரி திரட்டிய அனைத்து ஆதாரங்களையும் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். ஒரு தாயின் இந்த அசாத்தியமான துணிச்சலையும், விடாமுயற்சியையும் கண்டு வியந்த காவல்துறை அதிகாரிகள், மூடி வைக்கப்பட்டிருந்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர். “உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், குற்றவாளி மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல்துறை உறுதியளித்துள்ளது. மேலும் அமைப்பின் மெத்தனத்தைப் போக்கி, நீதிக்காக ஒரு தாய் நடத்திய இந்தப் போராட்டம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
