“நீ பார்ப்பதற்கு அழகாக இல்லை, உன்னுடைய நிறம் எனக்குப் பிடிக்கவில்லை… எனக்கு அழகான மற்றும் ‘ஸ்மார்ட்’ ஆன கணவன் தான் வேண்டும்” எனத் தனது கணவனைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்த மனைவி, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டம் கோந்திகேடா கிராமத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ண புரோகித் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கை இருந்தபோதிலும், 2017-ஆம் ஆண்டு ஒரு குடும்ப விழாவில் கமலேஷ் புரோகித் என்பவருடன் பிரியங்காவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட பிரியங்கா முடிவெடுத்தார். இதற்காகத் தனது காதலன் கமலேஷ் உதவியுடன் சுரேந்திர பாட்டி என்ற கூலிப்படை நபருக்கு ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார். ஏப்ரல் 3-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில், “வேலை முடியாவிட்டால் பணத்தைத் திருப்பித் தா” என பிரியங்கா அந்த நபரை வாட்ஸ்அப் மூலம் மிரட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில், பிரியங்கா தனது குடும்பத்தினரின் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் கதவைத் திறந்துவிட்டு கூலிப்படை நபரை உள்ளே அனுமதித்துள்ளார். அந்த நபர் தூங்கிக்கொண்டிருந்த தேவ்கிருஷ்ணாவை ஆயுதங்களால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தார்.
கொலைக்கு பிறகு, மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து தன்னை அறையில் பூட்டி வைத்துவிட்டு, கணவனைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் பிரியங்கா நாடகமாடினார். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையிலும், சைபர் செல் சோதனையிலும் பிரியங்கா நீக்கிய வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் லொகேஷன் தகவல்கள் மூலம் உண்மை அம்பலமானது.
எனது அண்ணன் கருப்பாக இருந்ததால் அண்ணி அவரை எப்போதும் வெறுத்து வந்தார். தன்னை மிகவும் அழகானவள் என்று எண்ணிக்கொண்டு அந்த கர்வத்திலேயே அண்ணனைக் கொன்றுவிட்டார்” என உயிரிழந்த தேவ்கிருஷ்ணாவின் தங்கை ஜோதி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் பிரியங்கா மற்றும் அவரது காதலன் கமலேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கூலிப்படை நபர் சுரேந்திர பாட்டியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
