தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல்குளத்தில் நடந்த பரிதாப சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர் காளீஸ்வரன்(19) (செல்லக்கனியின் மகன்), எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பலியானார்.

இவர் பிரதான சாலையில் பேனர் அமைக்கும்போது, அருகிலிருந்த மின்கம்பியை எடுத்தபோது மின்சாரம் தாக்கியதில் கடுமையாக காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காளீஸ்வரன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாநாட்டிற்கு முன்னரே விஜய் ரசிகரான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.