சீனாவின் ஷென்சென் நகரில் லி என்ற பெண் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இவர்கள் அனைவரும் தீவிரமான மூடநம்பிக்கையில் மூழ்கி, கண்ணுக்குத் தெரியாத சக்திகள் தங்களைத் துரத்துவதாக நம்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளைய மகள் தனக்குள் ஏதோ ஆவி புகுந்துவிட்டதாகக் கூறி, அதை வெளியேற்றும்படி அழுதுள்ளார். மருத்துவ உதவியை நாடாமல், ஆவியை விரட்ட அந்தத் தாய் எடுத்த விபரீத முடிவு மகளின் உயிரையே பறித்துள்ளது.

ஆவியை வெளியேற்ற மகளின் நெஞ்சில் ஏறி மிதித்தும், வாயில் வலுக்கட்டாயமாகத் தண்ணீரை ஊற்றியும் அந்தத் தாயும் மூத்த மகளும் சித்ரவதை செய்துள்ளனர்.

“இது வேலை செய்கிறது, இன்னும் செய்யுங்கள்” என அந்தப் பெண் மயக்க நிலையில் உளற, அதை உண்மை என நம்பி அவர்கள் நிறுத்தவில்லை. அடுத்த நாள் காலை அந்தப் பெண் ரத்த வாந்தி எடுத்து பிணமாகக் கிடந்தார்.

இது கவனக்குறைவால் நடந்த மரணம் எனக்கூறி அந்தத் தாய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல் சீனாவில் மற்றொரு வழக்கில், மகளின் தோழிக்குள்ளே பேய் இருப்பதாகக் கூறி நாற்காலியால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்ற ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.