ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில், கருணாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐபிஎல்’. இப்படத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான டிடிஎஃப் வாசன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகைகள் அபிராமி மற்றும் குஷிதா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். முழுமையான திரில்லர் பாணியில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம், வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி ஆளுமைகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
‘ஐபிஎல்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை மூத்த இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் படக்குழுவினருடன் இணைந்து பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், நடிகர் டிடிஎஃப் வாசன் தன்னைச் சந்தித்து, “தான் இன்னும் எப்படி மெருகேற்றிக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டதாகத் தெரிவித்தார்.
அதற்கு அவர் அளித்த அறிவுரை அனைவரையும் கவர்ந்தது. “நீ புதிதாக எதையும் கற்றுக்கொள்ள வேண்டாம். நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. எல்லாரிடமும் நட்பாகப் பழகு. சினிமா உலகில் ஹீரோவாக ஆன பிறகு, மாறிவிடாமல் இயல்பாக இருப்பது போதும். உனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போதும், வாய்ப்புகளை வழங்குவோரிடமும் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உன்னைக் காப்பாற்றும்” என்று டிடிஎஃப் வாசனுக்கு வெற்றிக்குரிய மந்திரத்தை வழங்கினார்.
