கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான லாரியில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தாமரைகுளம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு சர்வீஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது. இதனையடுத்து லாரி அங்கிருந்து ஜவுளிக்கடை மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் மணிமாறன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேனை வரவழைத்து பொது மக்களின் உதவியுடன் இடுப்பாடுகளில் சிக்கியிருந்த மணிமாறனை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் அவர் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் அப்புசாமி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.