உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கொடூர சம்பவம் புதன்கிழமை இரவு நிகழ்ந்தது. பரபரப்பான சந்தை ஒன்றில், ஸ்டுடியோவுக்குள் புகைப்படம் எடுக்க சென்ற மம்தா சவுகானை (35), அவரது கணவர் விஸ்வகர்மா சவுகான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொலை செய்தவுடன் தப்பியோடிய கணவரை, போலீசார் சில மணிநேரத்துக்குள் கைது செய்தனர்.
Gorakhpur Horror: Woman Gunned Down by Husband Outside Photo Studio pic.twitter.com/exNUzhqvPX
— The Times Patriot (@thetimespatriot) September 4, 2025
விசாரணையில், கடந்த ஒன்றரை வருடங்களாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவர்களுக்குள் குடும்ப தகராறு நீடித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மம்தா தனது 13 வயது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வாழ்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சம்பவத்தன்று ஸ்டுடியோவுக்கு சென்ற மம்தாவை கணவன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். வெளியே வந்தவுடன் வழிமறித்த விஸ்வகர்மா, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென துப்பாக்கியைக் கையிலெடுத்து சுட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மம்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நடுத்தெருவில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது, விஸ்வகர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
