ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் மனிதாபிமானமே அற்றுப்போன ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டயானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜிது முண்டா என்பவரின் சகோதரி கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ எடுப்பதற்காக ஜிது வங்கியை அணுகியுள்ளார்.

ஆனால், வங்கி மேலாளர் “கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது வாரிசு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறி பணத்தைத் தர மறுத்துள்ளார். கல்வியறிவற்ற பழங்குடியினரான ஜிதுவிடம் எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்களும் இல்லை.

 

அதிகாரிகளின் பிடிவாதத்தால் செய்வதறியாது தவித்த அவர், திங்கட்கிழமை அன்று சுடுகாட்டிற்குச் சென்று தனது சகோதரியின் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து, மிஞ்சியிருந்த எலும்புக்கூட்டை ஒரு துணியில் சுருட்டித் தனது தோளில் சுமந்து கொண்டு 3 கி.மீ தூரம் நடந்து வங்கிக்கு வந்துள்ளார்.

“இறந்தவர் நேரில் வர வேண்டும் என்றீர்களே, இதோ அழைத்து வந்துவிட்டேன்” என்பது போல அவர் எலும்புக் கூட்டுடன் வங்கிக்குள் நுழைந்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் உறைந்து போயினர். சிலர் கதறி அழுதனர், சிலர் வங்கியின் கல்நெஞ்சத்தைக் கண்டு கொதிப்படைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் ஜிதுவைச் சமாதானப்படுத்தி, வங்கியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஒரு ஏழை மனிதன் தனது சொந்தப் பணத்தைப் பெறப் பிணத்தைத் தோண்டியெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஒட்டுமொத்த சமூகத்தையே தலைகுனிய வைத்துள்ளது.