தென்மேற்குச் சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹாங்க்வி பாலம், பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அதன் ஒரு பகுதி உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. மத்திய சீனாவை திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த 758 மீட்டர் நீளப் பாலம், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. மலைப்பகுதி சரிந்து, பாலம் உடைந்து ஆற்றுக்குள் சரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, பாலம் இடிந்து விழுவதற்கு ஒருநாள் முன்னதாக, அருகில் உள்ள சாலைகள் மற்றும் சரிவுகளில் விரிசல்கள் மற்றும் நிலப்பரப்பு மாற்றங்கள் கண்டறியப்பட்டதால், திங்கள்கிழமை பிற்பகல் முதலே பாலம் போக்குவரத்துக்காக மூடப்பட்டு விட்டது. இதனால், இதுவரை உயிர்ச் சேதம் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பேரழிவுக்குக் காரணம், கடுமையான நிலச்சரிவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த செங்குத்தான மலைப் பிரதேசத்தில் நிலவும் புவியியல் ஸ்திரமின்மை தான் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை நிலவரப்படி, நிலச்சரிவு தீவிரமடைந்ததன் விளைவாகவே, பாலம் மற்றும் அதற்கான அணுகு சாலைகள் சேதமடைந்ததாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. எனினும், பாலத்தின் கட்டுமானத்திலோ அல்லது பொறியியல் வடிவமைப்பிலோ ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய விரிவான தொழில்நுட்ப விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஹாங்வி பாலம், சிச்சுவான் மற்றும் திபெத் இடையேயான முக்கியமான போக்குவரத்து இணைப்பாகக் கருதப்பட்டது. பாலம் திறந்து சில மாதங்களே ஆன நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கிங்ஹாய் மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த ஒரு ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
