அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியைச் சேர்ந்த 71 வயதுப் பெண் ருபிந்தர் கவுர், விவாகரத்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்தார். ஆன்லைன் திருமண செயலியின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த 75 வயதுடைய சரஞ்சித் சிங் கிரேவால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவரும் விவாகரத்து பெற்றவர்கள் என்பதால், இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் திருமணம் செய்வது கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
அதன் படி கிரேவால், தன் சொந்த ஊரான இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் திருமணம் நடத்தலாம் என ருபிந்தரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், திருமணத்துக்காக ருபிந்தர் இந்தியா வந்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு ருபிந்தர் மாயமாகி விட்டதாகவும், அவரிடம் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவரது சகோதரி அமெரிக்க தூதரகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கிரேவால் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்ட ஒரு நபரை பிடித்தனர். இவர் பஞ்சாபின் மல்காபட்டி பகுதியைச் சேர்ந்த சுக்ஜீத் சிங் சோன் என தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது, சோன் அளித்த வாக்குமூலம் போலீசாரையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ருபிந்தரிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்ற கிரேவால், மேலும் பணம் அபகரிக்க வேண்டிய திட்டத்தில், சுக்ஜீத் சிங் சோனிடம் ரூ.50 லட்சம் பேரம் பேசி, ருபிந்தரைக் கொலை செய்ய அழுத்தம் கொடுத்துள்ளார். திட்டமிட்ட படி இந்தியா வந்த ருபிந்தரை, சோன் கடத்தி, டீசல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.
மீதி உடல் பாகங்களை கிராமத்தின் வடிகாலில் வீசியதாகவும், இந்த கொடூர சம்பவத்தை கிரேவாலின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தியதாகவும் சோன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார், சம்பவ இடத்திலிருந்து எலும்புக்கூடுகளை மீட்டு, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது சுக்ஜீத் சிங் சோன் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான சரஞ்சித் சிங் கிரேவாலை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க பெண் ஒருவரை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, கொலை செய்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
