தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், அவரது மனைவி செல்வியும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் கவின்குமார் (26), ஒரு மென்பொருள் பொறியாளராக சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று தாத்தாவை வைத்தியம் பார்க்க பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை, ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில், அந்த வாலிபர், கவின்குமாரை தெருவிலேயே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்து வந்த போலீசார், கவின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி மூலம் மேற்கொண்ட விசாரணையில், குற்றம் செய்த நபர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சுர்ஜித் (24) என்பதும், அவர் ராஜபாளையம் பட்டாலியனில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணனின் மகனும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரியும் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரும் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சுர்ஜித்தை போலீசார் கைது செய்து ரகசிய விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “என் அக்கா மற்றும் கவின் பள்ளி பருவத்திலிருந்தே நெருக்கமாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடன் பேசுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவரை எச்சரித்தும் கேட்கவில்லை. நேற்று அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றதை அறிந்து அவரை துரத்தி சென்று தனியாக அழைத்து எச்சரித்தேன். பேசுவதை நிறுத்த முடியாது என கூறியதால் கோபத்தில் கொலை செய்தேன்” என சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார், சுர்ஜித்துக்கு எதிராக கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி கமிஷனர் சுரேஷ் தலைமையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சுர்ஜித்தின் பெற்றோர்களும் இந்த சம்பவத்திற்கு தூண்டுதலாக செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என சமூக அமைப்புகள் கேட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.