மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அரசு மாவட்ட மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (SNCU) எலிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் அந்த வார்டில், எலிகள் கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மற்றும் ஒயர்கள் மீது ஓடுவதும், அங்கிருக்கும் உணவுகளைத் தின்றுவிட்டுத் துள்ளி விளையாடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த மாநிலத்தில் எலி கடித்ததில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஆறிப்போவதற்குள், மீண்டும் இப்படி ஒரு அலட்சியம் அரங்கேறியுள்ளது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Two children died from rat bites in #Indore, then there were rats in a hospital in #Jabalpur, and now rats are found eating snacks in the SNCU of a government hospital in #Satna… God forbid, but how many politicians and officials would admit their children to such an SNCU? pic.twitter.com/3HWEV89ia9
— Siraj Noorani (@sirajnoorani) December 20, 2025
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனை சிவில் சர்ஜன் டாக்டர் அமர் சிங், இது பழைய கட்டிடம் என்பதால் எலிகள் வர வாய்ப்புள்ளதாகவும், இந்தப் பிரச்சனை பெரிதுபடுத்தப்படுவதாகவும் கூறி அலட்சியமான பதிலையே அளித்துள்ளார். இருப்பினும், மருத்துவமனை ஊழியர்கள் வார்டிற்குள்ளேயே உணவு உண்பதால் அதன் மிச்சங்கள் எலிகளைக் கவருவதாகவும், இதுவே எலிகளின் பெருக்கத்திற்குக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உயர்தர சிகிச்சை மற்றும் கிருமி இல்லாத சூழல் (Sterile condition) அவசியமான இந்த வார்டில், எலிகளின் நடமாட்டம் குழந்தைகளுக்குத் தொற்றுகளை ஏற்படுத்தி உயிருக்கு உலை வைக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
