கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது சஹத் (19) என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி வயநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார்.

செல்போன் கடையில் பணிபுரியும் இவர், அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்தப் பெண், தனது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சஹத்திற்கு அனுப்பியுள்ளார். காதலின் பெயரால் தொடங்கிய இந்தப் பழக்கம், இறுதியில் அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த இளம்பெண் சஹத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஹத், தன்னிடம் இருந்த பெண்ணின் ஆபாசப் படங்களை அவரது தோழிக்கே அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தனது அந்தரங்கப் படங்கள் கசிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மானந்தவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் க்ரைம் உதவியுடன் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சஹத்தை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் அந்தரங்கத் தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.