பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் இடையே எல்லைப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து, கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத சூழ்நிலையில், சண்டை நிறுத்தம் முறிந்து நள்ளிரவில் எல்லையின் பல்வேறு இடங்களில் மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

குறிப்பாக, சாமன் எல்லைப் பகுதியிலும், சாமன்- காந்தஹார் நெடுஞ்சாலையிலும் இரு தரப்புப் பாதுகாப்புப் படையினரும் கடும் மோதலில் ஈடுபட்டு மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தச் சண்டைக்கு ஒரு தரப்பினர் மற்றவர் மீது குற்றம் சாட்டியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்த மோதலுக்கான குற்றச்சாட்டுகள் குறித்துப் பார்க்கையில், பாகிஸ்தான் தரப்பு, பதானி பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குத் தங்களின் படைகள் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி ஹுல்லா முஜாஹித் கூறுகையில், காந்தஹாரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் புதிய தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதாகவும், இதற்குத் தங்கள் படைகள் பதிலடி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஸ்பின் போல்டாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொது மக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளில் அமைதியின்மை நிலவி வருகிறது.