அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ப்ரூக்லின் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், 20 வயது பெண்ணை ஒரு நபர் கடத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தனது தாயுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஃபிரட்ரிக் மார்ஷல் எனும் நபர் திடீரென அந்த பெண்ணை கட்டாயமாகத் தன்னுடன் இழுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

அதனைப் பார்த்த விட்ஃபீல்ட் என்பவர் உடனே அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற பொது அவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கிருந்த இன்னும் சில நபர்கள் அவருடன் சேர்ந்து மார்ஷலை பிடித்து கீழே தள்ளி தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஃபிரட்ரிக் மார்ஷலை கைது செய்தனர்.

அவர்மீது தாக்குதல், தொந்தரவு போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தின் போது அந்தப் பெண்ணுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் தாய், தனது  மகளை காப்பாற்றிய அனைத்து நபர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.