தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இந்த வரைவு பட்டியலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட அளவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முகவரியில் வசிக்காதவர்கள், உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறியும் முறை:
வாக்காளர்கள் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளங்களுக்கு சென்று, தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடலாம். அல்லது பெயர், வயது, தொகுதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து ‘தேடல்’ பொத்தானை அழுத்தினால், வாக்காளர் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
தேடலில் பெயர் இடம்பெற்றிருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதாக உறுதி செய்யலாம்.
பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என கருதினால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ஆம் தேதி வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். முகவரி மாற்றம் செய்தவர்கள் படிவம் 8-ஐ, புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பித்து ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் திருத்தங்களை மேற்கொள்ளவும் கூடுதலாக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலுக்கான முக்கிய அறிவிப்பு:
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த இறுதி பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
