ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் திருமணமான மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முர்மு என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறி அந்த மாணவியுடன் பழகிய முர்மு தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தனது கைபேசியில் ரகசியமாகப் படம்பிடித்த அவர் அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டித் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்தார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் முர்முவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உதவி செய்ய வந்த இடத்திலேயே மாணவியின் வாழ்க்கையைச் சீரழித்த வழக்கறிஞரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.