மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில், தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு மாதக் குழந்தையைச் சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மாமல்தே கிராமத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த காதேவாடி இன மக்கள் தங்களின் பசுக்களுடன் தங்கி விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஒரு குடும்பத்தினர் தங்களின் விவசாய நிலத்தில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு மாத பெண் குழந்தை தனது தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது.
இன்று அதிகாலை அனைவரும் எழுந்து பார்த்தபோது, தாயின் அருகில் இருந்த குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையைத் தேடினர். சிறிது நேரத் தேடுதலுக்குப் பிறகு, அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள கோதுமை வயல் அருகே குழந்தையின் உடல் பாகங்கள் சிதறி நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தையை ஏதோ ஒரு வனவிலங்கு, குறிப்பாகச் சிறுத்தை தூக்கிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், ஏற்கனவே பல கால்நடைகள் சிறுத்தை தாக்குதலுக்குப் பலியாகியுள்ள நிலையில், தற்போது ஒரு பச்சிளம் குழந்தையே உயிரிழந்திருப்பது கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊருக்குள் புகுந்துள்ள சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
